Friday, April 17, 2015

அட்சய திருதியை

திருதியை என்பது திதி ஆகும், திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரமே திதி ஆகும். இதனை வளர்பிறையில் பதினைந்து திதியும், தேய் பிறையில் பதினைந்து திதியுமாக முப்பது திதிகளாக ஜோதிடத்தில் வகுத்துள்ளனர். திருதியை திதி என்பது அம்மாவாசையில் இருந்து அல்லது பௌர்ணமியிலிருந்து மூன்றாவது நாளாகும், இதில் வளர்பிறையில் அதாவது அம்மாவாசையிலிருந்து நான்காவது நாள் வருவது திருதியை திதி எனப்படும், அம்மாவாசைக்கு மறுநாள் பிரதமை அல்லது பாட்டுமை திதி எனப்படும், அதற்க்கு அடுத்த நாள் துவிதியை திதி எனப்படும் இந்த இரண்டு நாட்களும் நிலவு தெரிவதில்லை. அம்மாவாசைக்கு பின்னர் நிலவு தெரிவது திருதியை அன்று தான். அதனால் தான் இதை மூன்றாம் பிறை என்பர். இந்த மூன்றாம் பிறையை பார்த்தவுடன் நாம் எதை பார்க்கிறோமோ அது போன்ற பலன்களையே அந்த மாதம் முழுவதும் அடைவர் என்ற ஐதீகம் நமது நாட்டில் பண்டை நாள் தொட்டு இருந்து வருகின்ற ஒன்றாகும். பொதுவாகவே மூன்றாம் பிறையை பார்த்தவுடன் நீங்கள் அடுத்து பார்ப்பது பணமாக இருந்தால் உங்களுக்கு அந்த மாதம் முழுவதுமே பண தட்டுப்பாடு வராது என்பது அனுபவ உண்மையாகும். இதை நீங்களே அனுபவித்து பார்த்து அறிந்து கொள்ளலாம். இது போன்ற எண்ணற்ற சூட்சும விஷயங்களை நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிச் சென்றுள்ளார்கள். அதுமட்டுமல்ல இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மூன்றாம் பிறையானது சித்திரை மாதம் வரும்போது அது அட்சய திருதியை என அழைக்கப் படுகிறது.


சந்திரன் சிறிது சிறிதாக தேயும் சாபம் பெற்ற பின்னர் சிவபெருமானை நோக்கி தவம் செய்து பதினைத்து நாள் தேய் பிறையாக வந்தாலும், மீண்டும் வளரும் வரத்தை பெற்றது இந்த சித்திரை மாத திருதியை திதியாகும், இதனால் சித்திரை மூன்றாம் பிறை சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை தினமாக அழைக்கப்படுகிறது. இது மட்டுமின்றி இந்த அட்சய திருதியைக்கு பல சிறப்புக்களை சொல்லலாம்.
பகீரதனின் கடும் தவத்தால் ஆகாயத்திலிருந்து இறங்கிய கங்கை நதியானவள் பூமியை தொட்டது இந்த அட்சய திருதியை நாளில்தான். மேலும் பஞ்சபாண்டவர் வன வாசத்தின்போது அட்சய பாத்திரம் பெற்றது இந்த அட்சய திருதியை நாளில்தான். அட்சய பாத்திரம் என்பது அள்ள அள்ள குறையாமல் உணவு வந்துகொண்டே இருக்கின்ற அமுத சுரபியாகும். இதேபோல இரட்டை காப்பியம் என்று புகழப்பட்ட மணிமேகலை நூலில் சொல்லப்பட்ட அட்சய பாத்திரத்தை மணிமேகலைக்கு கொடுக்கப்பட்டது இந்த அட்சய திருதியை நாளில் தான். திருமாலின் மணிமார்பில் திருமகளாகிய மகாலட்சுமி அலங்கரிக்கும் வரத்தை பெற்றதும் இந்த அட்சய திருதியை நாளில்தான். இந்திரனுக்கு சங்கநிதி பதுமநிதி என்ற இரண்டு அளவற்ற நிதி கிடைத்தது இந்த நாளில்தான். குசேலனுக்கு கண்ணன் கொடுத்த அளவற்ற செல்வமும் இந்த நாளில் தான் கொடுக்கப்பட்டது. திரௌபதி துகில் உறியப்பெற்றபோது சேலையை கொடுத்து மானம் காத்தான் கண்ணபிரான், அதுவும் இந்த அட்சய திருதியை நாளில்தான். ஆதிசங்கரர் ஒரு ஏழைப் பெண்ணுக்காக கனகதாரா ஸ்தோத்ரம் பாடியதும் இந்த நாளில் தான். இதில் பத்தொன்பதாவது ஸ்தோத்திரத்தை பாடும்போது அம்பாள் தங்க நெல்லிக்கனியை மழையாக பெய்ய வைத்தது இந்த நாளில்தான்.


இங்கே காட்டப்பட்டுள்ள புராண இதிகாச நிகழ்சிகளில் பொதுவான ஒரு விஷயம் இந்த நாளில் துவங்கப்பட்ட எந்த காரியங்களும் வரம்பற்ற வளர்ச்சியை அடையும் என்பது விதியாகும். இந்த நாளில் நீங்கள் செய்யும் எந்த செயலுக்கும் ஒன்றுக்கு பத்தாக நூறாக பலன் தரும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்த நாளில் நீங்கள் தானம் செய்வது மிகுந்த ஏற்றம் தரும் ஒரு செயலாகும். ஏனெனில் வருடம் முழுவதும் தானம் செய்யும் பேரு பெற்றவராக இருப்பீர்கள். எனவே இந்த நாளில் தானம் செய்வது என்பது முக்கியமான விஷயமாகும்.
ஆனால் நடப்பு காலங்களில் இந்த அட்சய திருதியை என்பது ஒரு வியாபார வாய்ப்பாக பயன்படுத்தப் படுகிறது என்றால் அது மிகையல்ல. அதிலும் நகை வியாபாரம் என்பது அளவிடற்கரியது. பல கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. உலகில் உள்ள தங்க இருப்பில் சுமார் பதினோரு சதவிகிதம் இந்தியாவிலேயே இருக்கிறது என்ற புள்ளி விபரம் தங்கத்தை நாம் சேமிப்பாக மட்டுமே பார்க்காமல் அதை சமுதாயத்திற்கான மதிப்பு மிக்க அடையாளமாக்கப்பட்டுள்ளது என்றால் அது மறுக்க முடியாத உண்மை. இதனால் தான் பொருளாதரத்தில் நம் நாடு எப்படி இருந்தாலும் தங்கத்தை நுகர்வதில் இந்திய முதல் இடத்தில் இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும். எப்படி இருந்தாலும் கடன் பட்டாகிலும் அட்சய திருதியை அன்று நகை எடுக்க வேண்டும் என்பதை வாழ்வின் குறிக்கோளாக் கொண்டுள்ள எத்தனயோ பெண்மணிகளை பெற்றுள்ள சமுதாயம் நமது சமுதாயமேயாகும். இது கவலை அளிக்கக் கூடிய நிலைதான்.


அட்சய திருதியை அன்று தங்கம் தான் வாங்க வேண்டும் என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லவில்லை. இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் வசதியானவர்களுக்கு மட்டும் அருள் புரிபவன் அல்ல. இல்லாத ஏழை எளியவர்களுக்கும் தனது அருளை மழையாக பொழிபவனே ஆண்டவன். இவ்வாறு இருக்க எப்படி தங்கம் தான் அட்சய திருதியை நாளில் வாங்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறியிருக்கும். இது முழுமையான வியாபார தந்திரம் என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்.
இந்த நல்ல நாளில் தானம் செய்து பாருங்கள், அதிலும் உடல் உணமுற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் தானம் உங்களை வாழ்வின் பல படிக்கு உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நாளில் நீங்கள் ஆரம்பிக்கும் தான தர்மம் ஆனது வருடம் முழுவதும் உங்களை தானம் செய்பவராக ஆக்கும் அப்படியென்றால் வருடம் முழுவதும் உங்களுக்கு பண கஷ்டம் என்பது அறவே இல்லாமல் போகும். தனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட பின்னர் தான் ஒருவன் தான தர்மத்திற்கு வருவான் என்பது உலகறிந்த உண்மை. ஆதலால் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. சனீஸ்வரன் இந்த நாளில் தான் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து தந்து உடல் குறைகளை நீக்கிக் கொண்டார் என்பது செய்தியாகும். எனவே தான் உடல் உணமுற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் உபகாரம் உங்களை உயர்த்தும்.


மேலும் இந்த நாளில் நீங்கள் தங்கம் வாங்குவதும் வாங்காததும் உங்களுடைய நிதி நிலைமையை பொறுத்தது ஆனால் எல்லோருக்கும் முடிந்த ஒன்று, மஞ்சள் வாங்குவது அல்லது உப்பு வாங்குவது இவற்றை நீங்கள் வாங்கினாலே உங்களை வாழ்வில் மங்களகரமான முனேற்றம் ஏற்ப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இந்த அட்சய திருதியை நம்முடைய வாழ்வில் ஒரு பெரும் முன்னேற்றத்தை உண்டு பண்ணட்டும் என உங்களோடு சேர்ந்து நானும் வேண்டிக்கொள்கிறேன்.

                                   திருச்சிற்றம்பலம்!!!!1 comment:

Aanand Kanthasamy said...

நல்ல பதிவு. உங்களின் விளக்கம் ஏன் அறியாமை இருளை நீக்கி அறிவு ஒளியை தந்தது. நன்றி.

Post a Comment